×

"ஜெய்பீம் படத்திற்கு விருது தரவே கூடாது" - மத்திய அரசுக்கு வன்னியர் சங்கம் கடிதம்!

 

ஜெய்பீம் படத்தில் வன்னியர் சங்கத்தை இழிவுப்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி அதன் தலைவர் அருள்மொழி தனது வழக்கறிஞர் பாலு சார்பில் நடிகர் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதில் வன்னியர் சங்கத்தின் புனித குறியீடான அக்னி குண்டத்தையும் காடுவெட்டி குருவை தவறாக சித்தரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஜெய்பீம் படத்தால் வன்னியர் சங்கமும் ஒட்டுமொத்த வன்னியர்களும் மனதளவில் புண்பட்டுள்ளனர் என்பதால் ஒரு வாரத்திற்குள் ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டது. இதற்கு பாமக மற்றும் வன்னியர் சங்கம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. #பணம்பறிக்கும்பாமக என்ற ஹேஸ்டேக்கையும் டிரெண்ட் செய்தனர். இச்சூழலில் தற்போது மத்திய  தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர், தமிழ்நாடு தகவல் மற்றும் பொதுவிவகாரத் துறை செயலர் ஆகியோருக்கு வன்னியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அதில், "அக்னி குண்டம் என்பது வன்னியர்களின் புனித சின்னமாக பல நூற்றாண்டுகளாக உள்ளது.  இதேபோல் குரு என்பது வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவரின் பெயர். ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி குண்டம் மற்றும் குருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர வன்னியர் சங்கம் தொடரவுள்ளது. எனவே, ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டவோ, அங்கீகரிக்கவோ தேசிய விருது போன்ற விருது வழங்கவோ கூடாது என கோரிக்கை வைக்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.