×

சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில்

 

வந்தே பாரத் ரயிலானது கடந்த 2019 ஆம் ஆண்டு புதுடில்லி - வாரணாசி இடையே முதலில் இயக்கப்பட்டது.  தற்போது சென்னை -மைசூர்,  சென்னை - கோவை என மொத்தம் 23 வந்தே பாரத்  இயக்கப்பட்டு வருகின்றன.  அதிவேகத்தில் செயல் திறன் கொண்ட இந்த ரயிலில் பயணிகளுக்கு விமானத்திற்கு நிகரான  சுழலும் இருக்கைகள்,  ஏசி,  விசாலமான ஜன்னல்கள் என சொகுசாக பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.  இதேபோல, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையேயும் வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 7 ஆம் தேதி காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னையில் இருந்து நெல்லைக்கும் விரைவில் படுக்கை வசதியுடன் கூடிய புதிய வந்தே பாரத் ரயில் இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.  

பிரதமர் மோடி கடந்த 27-ம் தேதி ஒரே நேரத்தில்  5 வந்தே பாரத் ரயில் சேவையை  தொடங்கி வைத்தார். கோவா -மும்பை, பாட்னா -ராம்ஜி , போபால் -இந்தூர் , போபால் -ஜபல்பூர் , பெங்களூர் - ஹூப்ளி உள்ளிட்ட 5  வந்தே  பாரத் சேவை புதிதாக தொடங்கப்பட்ட நிலையில்  இரண்டு ரயில்கள் மத்திய பிரதேசத்திலும், ஒரு ரயில் கர்நாடகாவிலும் ,ஒன்று பீகாரிலும், மும்பை -கோவா வழிதடத்திலும்  இயங்குகிறது.