×

தமிழகத்திற்கு நீட் தேர்வு கட்டாயம் தேவை; பாஜக பின்வாங்காது- வானதி சீனிவாசன்

 

தமிழகத்தில் புதிதாக கட்டபட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த பிரதமரிடம் தமிழகத்தில்  நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், உதகை மருத்துவ கல்லூரி திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிரணி தலைவியும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமிழகத்திற்கு நீட் தேர்வு கட்டாயம் தேவை என கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் 4100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டபட்ட 11 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது நீலகிரி மாவட்டம் உதகையில் 460 கோடி மதிப்பில் கட்டபட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரியும் திறந்து வைக்கபட்டது. காணொலி மூலமாக நடைபெற்ற அந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு காரணமாக தமிழக ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை உள்ளதால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டார். 

இந்த நிலையில் உதகை அரசு மருத்துவ கல்லூரி திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், “தமிழகத்திற்கு நீட் தேர்வு கட்டாயம் தேவை. அதனை அனைத்து கட்சி கூட்டத்திலேயே பாஜக தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்களுக்கு  நீட் தேர்வு தேவை என்ற முடிவிலிருந்து தமிழக பாஜக பின்வாங்காது” எனக் கூறினார்.