×

திமுக ஆட்சிக்கு பின் பெண் குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது- வானதி சீனிவாசன்

 

கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது போன்ற சம்பவம் முதல் முறை கிடையாது, தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு லாக்கப் மரணங்கள்,பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறினார்.

சென்னை அடையாறில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.நாளைய தினம் குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக தலைமை ஏற்பாடு செய்திருந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரின் முகவர்களாக இருக்கக்கூடிய பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாக்களிக்கும் முறை குறித்த விளக்கங்களை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை பொருத்தவரையில் கூட்டணி கட்சிகளில் சார்ந்த அனைவரையும் சந்தித்து ஆதரவு கேட்டு  இருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பிடமும் ஆதரவு கோரி இருக்கிறோம். தமிழகத்தில் லாக்கப் மரணங்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்துகள் பல்வேறு நிகழ்ச்சிகள் தற்போது அதிகமாக நடைபெற்றுக கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் இது போன்ற குற்றங்கள் நடந்த பொழுது எப்படி நடந்து கொண்டார்கள். காவல்துறை முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டில் நான் இருக்கிறதா என்று தெரியாத அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறார்கள். ஒரு சாதாரண விசாரணைக்கு கூட பொதுமக்கள் காவல்துறையினரை நாடுவதற்கு அஞ்சுகிற நிலைமை தான் தற்போது ஏற்பட்டுள்ளது” எனக் கூறினார்.