×

தவெக அரசு பதவியேற்ற 100 நாட்களில் மக்கள் விரோத அரசு என்று பெயர் பெற்றுள்ளது - வானதி சீனிவாசன்..!!

 

வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் தையூர் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஏழுமலை என்பவரின் மகளைக் காதலித்த 22 வயதான பிரவீன் என்ற இளைஞர், ஏழுமலை உள்பட 4 பேர் கொண்ட கும்பலால் ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் செய்தி கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தவெக-வின் கொள்கைகளைக் கொண்ட கட்சியின் பிரமுகரே தனது மகளைக் காதலித்தார் என்பதற்காக அந்தஸ்தைக் காரணம் காட்டி ஆணவக் கொலை வரை சென்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தவெக அரசு பதவியேற்ற 100 நாட்களில் சட்டம் ஒழுங்கும், சமத்துவமும் காற்றில் பறந்து இன்று தமிழகம் லாக்கப் மரணங்களாலும், ஆணவப் படுகொலைகளாலும், பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களாலும் இரத்தக் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

சட்டம் ஒழுங்கை சீர்செய்து மக்களை பாதுகாப்பார்கள் என்று பார்த்தால் சட்டமன்றத்தில் முதல்வரின் புகழ்துதி பாடி பாட்டுக்குப் பாட்டு நடத்திக் கொண்டு பொழுதை போக்கிக் கொண்டிருக்கும் இந்த அரசு பதவியேற்ற சில மாதங்களிலேயே மக்கள் விரோத அரசு என்ற அவப்பெயரைப் பெற்றுக் கொண்டிருப்பதுதான் நிஜம்.

இன்னும் சாதிப் பெயரையும், அந்தஸ்தையும் காரணம் காட்டி நடைபெறும் ஆணவக் கொலைகள் சமுதாயம் இன்னும் அடுத்த நிலைக்குச் செல்லவில்லை என்பதையே காட்டுகிறது. அதுவும் குறிப்பாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தவெக-வின் நிர்வாகியே இப்படி ஓர் கொடுங்குற்றத்தைப் புரிந்திருப்பது அவர்கள் கொள்கை எல்லாம் வெறும் பெயரளவுக்கே என்பதையே காட்டுகிறது. உயிரிழந்த இளைஞர் பிரவீன் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் இவ்வழக்கை விரைவில் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் காவல்துறையை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.