தவெக ஆட்சியில் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை- வைகோ
கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை, இதைவிட தவெக ஆட்சிக்கு வேறு மகுடம் என்ன இருக்க முடியும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.
தவெக அமைச்சர்களுடான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “ஊழலை ஒழிப்பது ஒன்றே எங்களின் குறிக்கோள்' என்று சொன்னது மட்டுமல்லாமல், அதில் வெற்றி பெற்று வருகிறார்கள். ஒரு ஆட்சிக்கு இதைவிட மகுடம் வேறு ஒன்றும் இருக்க முடியாது. கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டப்பேரவை நேரலை செய்யப்படுவது மக்களுக்கு தெளிவு ஏற்படுகிறது. அது ஆளும் கட்சிக்கு மக்கள் மன்றத்தில் ஆதரவை பெருக்கி கொடுக்கிறது. தொலைக்காட்சியில் சட்டமன்ற நிகழ்வுகள் முழுமையாக ஒளிபரப்பப்படுவது, ஒட்டுமொத்தமாக நிர்வாகத்திற்கும் நல்லது. ஜனநாயகத்திற்கும் நல்லது.
எதிர்கட்சிகள் என்ன தான் கேள்விக்கணைகளை தொடுத்து பாய்ந்து வந்தாலும் அவற்றை இடைமறித்து சிறப்பாக பதில் சொல்லும் ஆற்றலை அமைச்சர்கள் பெற்றுள்ளார்கள். அதனால்தான் அவர்கள் சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டு சாதித்து வருகிறார்கள். தவெக ஆதரவு கட்சி இரண்டாம் கட்ட கூட்டம் 9ம் தேதி நடைபெறுகிறது, கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள். கண்டிப்பாக அதில் நாங்கள் பங்கு பெறுவோம். சட்டசபையில் முதலமைச்சர் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். தவெகவின் 110 நாட்கள் ஆட்சியில் ஊழலை ஒழிப்பதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.” என்றார்.