×

“திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தான் தொகுதிகள் முடிவாகும்”- வைகோ

 

தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ, “திமுக பேச்சுவார்த்தை குழு அறிவித்தபின் மதிமுக பேச்சுவார்த்தை குழுவை அறிவிக்கும். அப்போது நடக்கும் பேச்சுவார்த்தையின் போது தான் எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகும். இப்போதைக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தயார் செய்து வருகிறது. நடைபயணத்தின் போது கண்ட பிரச்சனைகள் அறிக்கையில் வரும். 

தமிழகத்தின் வாழ்வாதாரங்களை காப்பாற்ற நடைபயணம், போராட்டங்களை நடத்தி பாதுகாத்து மீட்டு தந்து உள்ளேன். நெய்வேலி மின் நிலையம் வட நாட்டு முதலாளிக்ளுக்கு செல்லாமல் பாதுகாத்து உள்ளேன். தமிழ்நாடு பொது பிரச்சனைகளில் போராடி உள்ளேன். மீத்தேன் அலுவலகத்தை காலி செய்து வைத்தேன். 4 மாநிலத்தை கடந்து மத்திய பிரதேசத்தில் ஒரு மாநில கட்சி போராட்டம் நடத்திய வரலாறு மதிமுகவிற்கு உண்டு. திராவிட இயக்கத்தை பாதுகாக்க ஈட்டி முனையான திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெறும். திமுக தனி பெரும்பான்மையை பெறும். தொடர்ந்து திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் நடத்துவார் என்று நம்புகிறேன். இதற்கான பிரச்சாரத்தை ஈடுபடுவோம். விஜய் பேச்சுக்கு எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை” எனக் கூறினார்.