எடப்பாடி மோடியின் கொத்தடிமை; 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிப்பெறும்- வைகோ
நாகையில் உள்ள திருமண விழாவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நாகை மாவட்ட செயலாளர் ஶ்ரீதர் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. மதிமுக பொதுசெயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற திருமண விழாவில், நாகை எம்பி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, பூண்டி கலைவாணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தலைவர் கௌதமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, இந்தியா கூட்டணி தமிழ்நாட்டில் திமுக தலைமையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோடிக்கு கொத்தடிமையாக இருந்து வருகிறார் எனவும் கடுமையாக விமர்சித்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இசைக்காமல் தேசிய கீதத்தை இசைத்து பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தை இசைத்தது கண்டனத்திற்குரியது என்று கூறிய வைகோ, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஏஜெண்டாக பதவியேற்ற நாள் முதல் செயல்பட்டு வருகிறார் என்றும் கடுமையாக விமர்சித்தார். மேலும், வஞ்சகத்தோடு செயல்படும் ஆளுநர் பதவியில் நீடிக்க கூடாது என்றும், ஆளுநர் பதவியே அகற்ற வேண்டும் எனவும் சாடினார்.