வீட்டில் செய்வினை உள்ளதால் ரத்தம் கக்கி செத்துடுவீங்க”- வடிவேலு பட பாணியில் நூதன மோசடி
புதுச்சேரியில் வடிவேலு பட பாணியில் மூதாட்டியிடம் பரிகாரம் செய்வதாக கூறி நகை, பணம் திருடிய நெல்லையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கோமளவள்ளி (59). இவரது வீட்டுக்கு ஜோசியம் பார்ப்பதாக கூறி 2 பேர் வந்தனர். அவர்கள் கோமளவள்ளி வீட்டில் செய்வினை வைத்துள்ளதாகவும், வீட்டில் ரத்தம் கக்கி இறப்பார்கள் என அச்சுறுத்தி, பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளனர். இதனை உண்மை என நம்பி அவரும் அவர்களை வீட்டுக்குள் அனுமதித்துள்ளார். அப்போது பரிகாரம் செய்ய தங்க நகை வேண்டும் எனக்கூறவே கோமளவள்ளி 2 கிராம் மோதிரம், 3 கிராம் கம்மலை வழங்கி உள்ளார். மேலும் பரிகார பூஜைகளுக்காக ரூ.18 ஆயிரத்து 600 வழங்கினார். பரிகாரம் செய்ய வாங்கிய நகைகளை, ஒரு பாத்திரத்தை வாங்கி மஞ்சள் கலந்த நீரில் போட செய்து பூஜை செய்துள்ளனர். பூஜைகளை முடித்துவிட்டு புறப்படும்போது மஞ்சள் நீரில் உள்ள நகைகளை மாலை 6 மணிக்கு மேல் எடுக்க வேண்டும் எனக்கூறி புறப்பட்டு சென்றனர்.
பின்னர் மாலை 6 மணிக்கு பின் பாத்திரத்தில் இருந்த மஞ்சள் நீரில் இருந்த நகைகளை எடுக்க பார்த்த போது நகைகள் காணமால் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு கோமளவள்ளி வீட்டுக்கு வந்து சென்ற நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் புதுச்சேரி ரெயில் நிலையம் அருகே சுற்றித்திரிந்த 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்த சின்னராசு (39), மிக்கில் (எ) ராக்கெட் (30) என்பது தெரியவந்தது. பிறகு அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது கோமளவள்ளி வீட்டில் செய்வினை பரிகாரம் செய்வதாக கூறி நகை திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சின்னராசு, மிக்கில் ஆகியோரை போலீசார் கைது செய்து மோதிரம், கம்மலை பறிமுதல் செய்தனர். பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். புதுச்சேரியில் வடிவேல் படப்பாணியில் மூதாட்டியிடம் பரிகாரம் செய்வதாக கூறி, நூதன முறையில் நகை பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.