×

வடவள்ளி சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்! முழு பின்னணி 

 

அதிமுகவில் இருந்து விலகிய எஞ்சினியர் வடவள்ளி சந்திரசேகர் மீண்டும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் தன்னை அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர்  சந்திரசேகர் இவர் எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில இணை செயலாளராக இருந்தார். அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய நண்பராக கட்சியினரால் அறியப்பட்டவர். கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்பினார். தெற்கு தொகுதியை பா.ஜ.,வுக்கு ஒதுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதால், மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனனுக்கு வடக்கு தொகுதி வழங்கப்பட்டது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் அவரது மனைவி சர்மிளா சந்திரசேகரை போட்டியிட வைத்து மேயராக்க விரும்பிய நிலையில், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 3 வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. மேலும் கடந்த 2022 ல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்தபோது, சந்திரசேகரும் சிக்கினார். அவரது வீட்டில் ஒன்பது மணி நேரம் சோதனை நடந்தது. 

ஆவணங்கள், லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றிச் சென்றனர். அச்சம்பவத்துக்கு பின் அ.தி.மு.க., நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார். இதனிடையே கடந்த ஏப்ரல் 11 தேதி  தனிப்பட்ட காரணங்களுக்காக, கட்சியில் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக, வடவள்ளி சந்திரசேகர் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கையை பதிவிட்டார். ஆனால் விலகல் தொடர்பாக தெளிவான காரணங்களை கூறாமல் சந்திரசேகர் இருந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். வருமான வரித்துறை சோதனை, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை போன்ற நெருக்கடியால் சந்திரசேகர் அதிமுகவில் இருந்து விலகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.