×

"2 டோஸ் கட்டாயம்... சீசன் டிக்கெட்களில் தடுப்பூசி சான்று எண்" - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 

தமிழ்நாட்டை மீண்டும் கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா பரவல் உச்சம் பெற்றுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே வாரத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்படைந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதேபோல வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மீறி வந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது.

மற்ற நாட்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுப் போக்குவரத்தில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க தெற்கு ரயில்வேயும் சென்னை புறநகர் மற்றும் பெருநகர் ரயில்களில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது. முழு ஊரடங்கு என்பதால் இன்று பாதிக்கு பாதி ரயில்களே செயல்பாட்டில் உள்ளன. குறிப்பாக அனைத்து நாட்களிலும் 50 சதவீத இருக்கைகளில் அமரும் வகையில் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளது.

நாளை (ஜன.10) முதல் ஜனவரி 31 வரை புறநகர் ரயில்களில் பயணிக்கும் அனைவருமே கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆகவே பயணிகள் அனைவரும் கட்டாயம் இரண்டு டோஸ் போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை ஸ்மார்ட்போனிலோ அல்லது காகித வடிவிலோ காண்பிக்க வேண்டும். ஒருவேளை சான்றிதழ் இல்லாமல் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியிருந்தது. இச்சூழலில் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளில் தடுப்பூசி சான்றிதழ் எண்ணை பொறிக்கும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே சீசன் டிக்கெட் பெற வேண்டுமென்றால் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும்.