×

வ.உ.சி. அவர்களின் 150-வது ஆண்டு பிறந்த நாள் :  நூல்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் விடுதலைப் போராட்ட வீரர் வஉசி அவர்களின் 150ஆவது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ள வஉசி பன்னூல் திரட்டு முதல் தொகுதி மற்றும் வஉசி திருக்குறள் உரை இரண்டாம் தொகுதி ஆகிய நூல்களை வெளியிட்டார்.

வ உ சிதம்பரனார்  150-ஆவது பிறந்த நாள் விழாவினை ஒட்டி தமிழக முதல்வர் 14 வகையான அறிவிப்புகளை சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார் . அவற்றுள் வ உ சிதம்பரனார் எழுதியுள்ள அனைத்து புத்தகங்களும் புதுப்பொலிவுடன் ,புதுப்பிக்கப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலமாக, குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்பதும் ஒன்றாகும்.  அதன் தொடர்ச்சியாக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை சீராய்வு கூட்டத்தின்போது தமிழ்நாடு முதல்வரின் அறிவிப்பின்படி வஉ சிதம்பரனார் எழுதிய வெளிவராத படைப்புகள் மற்றும் அச்சில் இல்லாத படைப்புகளை வஉசி நூற்களஞ்சியமாக 4 நூல்களாக பதிப்பிக்கலாம் என்று அறிவுறுத்தினார்.

அதன்படி விடுதலைப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழரும்,   பழம்பெரும் நூல்களைத் தேடி புதுப்பித்து  உரை எழுதியவருமான வ உ சிதம்பரனார் அவர்களின் எழுத்துக்கள் வஉசி நூல் களஞ்சியமாக தொகுக்கப்பட்டு , அவரது 150-வது பிறந்த ஆண்டான இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் குறைந்த விலையில் வெளியிடப்படுகிறது. முதல் தொகுதியில் வஉசி எழுதிய தன்வரலாறு, மெய்யறிவு, மெய்யறம் ஆகிய நூல்களும் வ உ சி உரை, வஉசி கண்ட பாரதி என்ற நூல், வஉசியின் பாடல் திரட்டு, வஉசிகட்டுரைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இரண்டாம் தொகுதி வஉசி திருக்குறளுக்கு எழுதிய உரையாகும். வஉசியின் தேசப்பணி, தியாகம், தொண்டு ஆகியவற்றுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல வஉசியின் இலக்கியப்பணி,  தன் வாழ்வை திருக்குறள் நெறிப்படி அமைத்துக்கொண்ட வஉசி திருக்குறளுக்கான உரையை தேடி பதிப்பித்தது இதில் குறிப்பிட்டுள்ளது.

வ உ சி எழுத்துக்களை ஆய்வு செய்து வெளிவராத படைப்புகளை சேகரிப்பதில் புலமை பெற்றுள்ள சென்னை பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் அரசு, பதிப்பாசிரியராக இருந்து இப்பெரும் தொகுத்துள்ளார் . புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது  அட்டைப்படம் வடிவமைத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.