2 ஆண்டுகளாக மகளிர் உரிமை பெற்ற உத்தரப்பிரதேச பெண்!
தமிழ்நாடு மகளிர் உரிமைத் தொகைக்கு உத்தர பிரதேச பெண் பயனாளி ஆகிப்போன சம்பவம் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தமிழ்நாடு மகளிர் உரிமைத்தொகைக்காக திட்டம் ஆரம்பித்த புதிதில் விண்ணப்பித்துள்ளார். அப்போது மகளிர் உரிமைத்தொகை காண தகுதிகள் அடிப்படையில் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தனக்கு எந்த ஒரு குறுஞ்செய்தியோ அல்லது தகவலோ கிடைக்கப் பெறாததால் மகேஸ்வரியும் தனக்கு தகுதியின் அடிப்படையில் மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டதாக எண்ணியுள்ளார்.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை காண விண்ணப்பங்களின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு அரசாணை வெளியிட்டது. இதனை அடுத்து கிணத்துக்கடவு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்காக மகேஸ்வரி இரண்டாவது முறையாக மீண்டும் விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அதிகாரிகள் மகேஸ்வரிக்கு ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் உரிய முறையில் விசாரணை நடத்தி தனக்கு மகளிர் உரிமை தொகையை பெற்றுத் தர வேண்டும் என சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார். இதுகுறித்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் மகேஸ்வரிக்கு மாற்றாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாந்தி தேவி என்ற பெண்ணின் வங்கி கணக்கிற்கு தொடர்ந்து இரண்டு வருடமாக மகளிர் உரிமைத்தொகை செலுத்தப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் மகேஸ்வரி மற்றும் சாந்தி தேவியின் வங்கி கணக்குகளும், ஆதார் என்னும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் விசாரித்த போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.