×

உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய் இன்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

 

உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கோரி மனு அளித்திருந்த நிலையில், இன்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி எப்போதுமே வரலாற்று சிறப்பு மிக்க பார்வர்டு பிளாக் கட்சியின் கோட்டை ஆகும். இந்த தொகுதியில் ஃபார்வர்ட் பிளாக் கட்சிக்கு அடுத்தபடியாக அதிகமாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எதிர்பாராதவிதமாக திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸுக்கு இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பார்வர்ட் பிளாக் கட்சியின் கோட்டை என அறியப்பட்ட உசிலம்பட்டி தொகுதியில் சிங்கம் சின்னத்தை தவிர இரட்டை இலை, உதயசூரியன் மட்டுமே மக்களுக்கு தெரியும். ஆனால் அந்த மக்களுக்கு பரிட்சையம் இல்லாத  காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தை போட்டியிட வைத்தது திமுக. ஏற்கனவே தென் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தி எழுந்த நிலையில் மக்கள் வேறு வழியின்றி தமிழக வெற்றி கழகத்தை இந்த தொகுதியில் வெற்றி பெறச் செய்தனர். பாரம்பரிய மிக்க மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கிய மைல்களாக பார்க்கக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க உசிலம்பட்டி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. அவ்வளவு சிறப்பு மிக்க இந்த தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்ற விஜய் மகாலிங்கத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு கோரி மனு அளித்திருந்த நிலையில், இன்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இருவரும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  அண்மையில் சட்டசபையில் அவர் பேசியபோது ஏற்பட்ட அரசியல் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.