தவெக, திமுக, அதிமுகவுக்கு பறந்த அவசர அழைப்பு - தமிழகத்தில் கூடும் அனைத்துக் கட்சி கூட்டம்!
தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2027 ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் 12 முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் தொடர்பான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை அளிக்கலாம். அவற்றின் மீதான தீர்வுகள் டிசம்பர் 28 ஆம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ஏற்கெனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள விரும்புவோர் படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து உரிய அலுவலர்களிடம் அளிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மற்றும் ECINET கைப்பேசிச் செயலி வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் (SSR) கால அட்டவணை, தொடர்புடைய சட்டப்பூர்வ விதிமுறைகள், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் அண்மையில் வழங்கிய அறிவுறுத்தல்கள் குறித்து விளக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, வரும் 23-ம் தேதி தலைமைச் செயலகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க தவெக, திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, சிபிஐ உள்ளிட்ட மாநில அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்), காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட தேசியக் கட்சிகள் என மொத்தம் 13 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக நடைபெற உள்ள இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.