×

 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு!!

 

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. குறிப்பாக சமீபத்தில் வாக்காளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.   அதன்படி கடந்த 5 ஆம் தேதி  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

இந்த சூழலில் 21 மாநகராட்சிகள் உட்பட நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு பிப்ரவரியில் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. ஜனவரி 3ம் வாரத்தில் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் ,இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இட ஒதுக்கீடு பணிகளையும் மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் வருகின்ற 19ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறது. தமிழகத்திலுள்ள 21  மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் ,490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட இருக்கிறது.  கோயம்பேடு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய கூட்டரங்கில் வருகின்ற 19ஆம் தேதி காலை 11.30 மணியளவில் கூட்டம் நடைபெறும் என்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிகிறது.