×

டிஜிட்டல் அரஸ்ட் எனக்கூறி மோசடி செய்த உ.பி நபரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!

 

மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவத்ஸன் (73) இவருக்கு கடந்த மாதம் 26 ஆம் தேதி வாட்ஸ்அப் மூலம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை குற்றவியல் துறை அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் பயன்படுத்தும் சிம் கார்டு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாகவும், அமலாக்கத் துறை, சிபிஐ, இன்டர்போல், மற்றும் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கை போன்ற ஆவணங்களை காட்டி உங்களை கைது செய்யப் போவதாக மிரட்டி உள்ளார்.

மேலும் உங்களது வங்கிக் கணக்குகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா விதிமுறைப்படி ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி, பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை அனுப்புமாறும், அவை திருப்பி உங்களுக்கு அனுப்பப்படும் என்றும், அனைத்தும் சரியாக இருந்தால் உங்களை கைது செய்யமாட்டோம் எனவும் அந்த நபர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஶ்ரீவத்ஸன், கடந்த 25.09.2025 முதல் 05.10.2025ஆம் தேதி வரை, அவரது வங்கிக் கணக்கிலிருந்து வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 4.15 கோடி ரூபாயை பரிமாற்றம் செய்துள்ளார். இதனையடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரை தொடர்பு கொண்டு பேசிய அதிகாரியை மீண்டும் தொடர்பு கொண்டபோது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஶ்ரீவத்ஸன், இதுகுறித்துச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்ற ப்பிரிவின் கணினிசார் குற்றப்பிரிவில் 13 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மத்திய குற்றப் பிரிவு தனிப்படை அமைத்து, மோசடி செய்த நபரின் செல்ஃபோன் எண்ணை தொழில்நுட்ப பகுப்பாய்வு செய்து விசாரணை நடத்தியதில், அந்த எண் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மனிஷ்குமார் (23) என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதனடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலைய டெல்டா-2 அணியின் சிறப்புக் குழு ஒன்று உத்தரப் பிரதேசம், ஜான்சிக்கு விரைந்தது. அங்கு உள்ளூர் காவல் துறையின் உதவியுடன் நேற்று முன்தினம் மனிஷ்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து 2 மொபைல்போன்கள், ஆதார் அட்டை, ஏடிஎம் அட்டைகள் மற்றும் மோசடி நிதிக்கு பயன்படுத்திய பல வங்கி பாஸ்புக் உட்பட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து மனிஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில் அவர் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து பல நபர்களை ஏமாற்றியதும், மேலும் சமூக ஊடகங்கள் மற்றும் போலியான ஆன்லைன் வேலைவாய்ப்பு தளங்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி இதேபோன்ற மோசடிகள் செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மணிஷ்குமார் உத்தரப் பிரதேசம், ஜான்சியில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு ட்ரான்சிட் வாரண்ட் பெற்று சென்னைக்குக் அழைத்து வரப்பட்டு, சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.