உள்ளாடை, டி-ஷர்ட் விலை உயர்வு! காரணம் என்ன?
உள்ளாடை, நைட்வேர், டி-ஷர்ட், குழந்தைகள் ஆடைகள் உள்ளிட்ட பின்னலாடைகளின் விலை நாடு முழுவதும் 5% உயர உள்ளது.
உள்ளாடை, நைட்வேர், டி-ஷர்ட், குழந்தைகள் ஆடைகள் உள்ளிட்ட பின்னலாடைகளின் விலை நாடு முழுவதும் 5% உயர உள்ளது. திருப்பூர் பின்னலாடை துறையில் பருத்தி, நூல், தொழிலாளர் கூலி, சாயம், எலாஸ்டிக், தையல் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதால் உற்பத்தி செலவு உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்த உற்பத்தி செலவு 20% அதிகரித்துள்ளதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIHMA) தெரிவித்துள்ளது. திருப்பூரின் உள்நாட்டு பின்னலாடை துறை 2,500 உற்பத்தி நிறுவனங்களை கொண்டுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு வழங்குகிறது.
திருப்பூர் என்பது இந்தியாவின் "பின்னலாடை நகரம்" (Knitwear Capital) என்று அழைக்கப்படுகிறது. அங்கிருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் பல வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இங்குப் பணிபுரிகிறார்கள். மூலப்பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்திற்கேற்ப ஆடை விலையும் மாற்றப்படுகிறது.