×

“மகளிர் உரிமைத் திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என பலர் சூழ்ச்சி”- உதயநிதி ஸ்டாலின்

 

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்ததும்  இன்னும் அதிகமான திட்டங்களை முதலமைச்சர் மக்களுக்காக வழங்குவார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை நிறுத்துவதற்காக பலர் சூழ்ச்சி செய்தார்கள் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.


நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “உங்களையெல்லாம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஐந்து ஆண்டுகால சாதனைகளுக்கு சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. நெல்லைக்கு எப்போது வந்தாலும் தனி உற்சாகம். இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் அதிகமாக வந்திருக்கிறீர்கள். மகளிருக்கு தமிழக முதலமைச்சர் அதிகமாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல் கையெழுத்து ஆட்சி பொறுப்பேற்றதும் மகளிர் விடியல் திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தினார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அனைவருக்கும் மகுடம் வைத்தது போல் அமைந்திருக்கிறது. இந்தத் திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என பலர் சூழ்ச்சி செய்தார்கள்.

 தேர்தலை காரணம் காட்டி கோடைகால நிவாரண நிதியாக சேர்ந்து மொத்தமாக 5000 ரூபாய் மகளிருக்கு முதலமைச்சர் வழங்கி இருக்கிறார். தமிழர் நாகரிகத்தை உலகம் அறிய செய்யும் வகையில் முதலமைச்சர் நெல்லையில் பொருநை நாகரிகத்தை வெளிக்காட்டும் வகையில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. சுய உதவி குழுவை சேர்ந்த மகளிர் எந்த கோரிக்கை வைத்தாலும் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென முதல்வர் எங்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார். மக்களின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். மக்களை தேடி அரசு வந்து பட்டாக்களை வழங்கி வருகிறது. திராவிட மாடல் 2.0 இன்னும் அதிகமான திட்டங்களை முதலமைச்சர் வழங்குவார்” என்று கூறினார்.