"முடிஞ்சா, தைரியம் இருந்தா முதலமைச்சர் வாயை திறந்து பதில் சொல்லட்டும்" - உதயநிதி ஸ்டாலின்
தவெக ஆட்சி அமைந்ததில் விவசாயிகளுக்கு தான் அதிக பாதிப்பு என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தவெக ஆட்சி அமைந்ததில் விவசாயிகளுக்கு தான் அதிக பாதிப்பு. காவிரி விவகாரம் குறித்து பேச நாளை ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கியுள்ளோம். அப்போது நிறைய கேள்விகள் கேட்போம். முடிஞ்சா, தைரியம் இருந்தா முதலமைச்சர் வாயை திறந்து பதில் சொல்லட்டும். வேளாண் பட்ஜெட்டில் புதிதாக எதுவுமில்லை. விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்காக குரல் கொடுக்கவே கருப்பு சட்டை அணிந்துள்ளோம். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையெல்லாம் புதிய திட்டங்கள் போலப் பெயர் மாற்றி அறிவித்துள்ளனர். தவெக அரசு வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது.
பயிர் கடன் தள்ளுபடியில் ஏமாற்றம். குறுவை சாகுபடி செய்ய முடியாமல் இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கறுப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தோம். மேகதாது காவிரி விவகாரத்தில், 'தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்கிறேன்' என்கிறார். ஆனால் அங்குள்ள முதலமைச்சர் 'வர வேண்டாம்' என்கிறார். காவிரி, மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்றார்.