×

உதயநிதி ஸ்டாலின் அட்டாக்..! கடந்த முறை அதிமுகவை அடகு வைத்தார்கள்; இந்த முறை பாஜகவிடம் விற்று விட்டார்கள்..!

 

சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் (நேற்று) ஏப்.4 பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, "மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அந்த நம்பிக்கையோடு உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறோம்.

3 மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை, கோடை கால சிறப்பு நிதி என 1.31 கோடி இல்லதரசிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளோம். பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு திட்டம், மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

ஆனால், டெல்லியில் ஆளும் மத்திய அரசு நமக்கு ஏதாவது உதவி செய்தார்களா? என்றால் இல்லை. நம்ம கேட்கும் நிதியையும் கொடுப்பதில்லை. கல்வி நிதி மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கென எந்த திட்டமும் இல்லை. பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தமிழ்நாடு வருகிறார்கள். ஆனால், நிதியோ திட்டமோ வருகிறதா? என்றால் இல்லை.

அதிமுகவை அழைத்துக் கொண்டு பாஜக தமிழகம் வந்தால் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். அதிமுகவை கடந்த தேர்தலில் பாஜகவிடம் அடகு வைத்தார்கள். இந்த முறை அதிமுகவை பாஜகவிடம் விற்று விட்டார்கள்.

சுயமரியாதை உள்ளவர்கள் தாய்க் கழகம் நோக்கி வருகிறார்கள். அதிமுக வெற்றி பெற்றால் டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் பாஜக தமிழகத்தை ஆட்சி செய்யும். எனவே, மீண்டும் திமுக நல்லாட்சி தொடர்வதற்கு அடுத்து 19 நாட்களும் பிரச்சாரத்தை திமுக தொண்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும். திமுக தொண்டர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து ஏன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்? ஏன் அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்" என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.