பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளைக் காக்கும் முயற்சியை முறியடித்தோம்- உதயநிதி ஸ்டாலின்
பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை திமுக, மக்களின் துணையோடு முறியடித்ததே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க காரணம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் வன்கொடுமைக்கு ஆளான பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவை சேர்ந்த சிலர் சம்மந்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து 2021ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கில், பொள்ளாச்சி, ஜோதிநகர் சபரிராஜன் (28), மாக்கினாம்பட்டி திருநாவுக்கரசு (30), சூளேஸ்வரன்பட்டி சதீஷ் (29), சூளேஸ்வரன்பட்டி வசந்தகுமார் (26), ஆச்சிபட்டி மணிவண்ணன் (28), மகாலிங்கபுரம் பாபு என்கிற பைக் பாபு (28), ஆச்சிபட்டி ஹெரோன் பால் (28), வடுகபாளையம் அருளானந்தம் (36), பொள்ளாச்சி பணிகம்பட்டி அருண்குமார் (29) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.