×

"உங்களைப்போல அமித்ஷா வீட்டுக் கதவை தட்டவில்லை"- ஈபிஎஸ்க்கு உதயநிதி பதிலடி

 

முதலமைச்சரின் திட்டங்களை எடுத்துக்கூறி மக்களை சந்தித்து வருகிறோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற அடிப்படையில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “உங்கள் கட்சி மாதிரி வீடு வீடாக போய் கதவைத் தட்டி திமுகவில் உறுப்பினராக சேருங்கள் என்று கெஞ்சுகின்ற கட்சி அல்ல அதிமுக. இந்தியாவில் எந்த கட்சியாவது வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்ப்பதற்கு பிச்சை எடுத்த கட்சி உண்டா? திமுகவினர்தான் அப்படி செய்கின்றனர். அவர்கள் நம்மை பார்த்து பேச என்ன தகுதி இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை மக்கள் செல்வாக்கு உள்ள கட்சி திமுக மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது, தொண்டர்களின் செல்வாக்கையும் இழந்துவிட்டது. திமுகவில் உறுப்பினராக சேர கூட யாரும் முன் வராததால் தான் கதவை தட்டி தட்டி வீடு வீடாக பிச்சை எடுப்பதை போல திமுகவில் உறுப்பினர் சேர்க்கை இன்று நடந்து வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்று பெயரை அழகாக வைத்துள்ளனர். மக்களை ஏமாற்றுவதற்காக மக்களை உஷாராக இருங்கள். செல்போன் நம்பர் கேட்டால் திமுக காரர்களிடம் கொடுத்து விடாதீர்கள் உங்கள் வீட்டில் இல்லாத போது ஊரில் இருக்கும் பொழுது உங்களுக்கு கால் செய்வார்கள் வெளியூரில் இருக்கிறீர்கள் என்று சொன்னால் வீட்டில் புகுந்து அடித்து சென்றுவிடுவார்கள், அதனால் உஷாராக இருங்கள்” என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சென்னையில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நம் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக மிக நலமுடன் உள்ளார். மருத்துவர்களின் மருத்துவத்தினால் மட்டுமல்ல, மக்கள் மற்றும் கழகத்தினரின் பேரன்பினால் தலைவர், இரண்டு நாட்களில் வீடு திரும்புவார். உங்களைப் போல அமித்ஷா வீட்டுக் கதவையோ, கமலாலயத்தின் கதவையோ திருட்டுத்தனமாக தட்டவில்லை, அரசுத் திட்டங்களை எடுத்துக் கூறி தைரியமாக மக்களைச் சந்தித்து வருகிறோம்” என்றார்.