“முதல்வர் 2 நாட்களில் வீடு திரும்புவார்”- உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களில் சரியாகி வீடு திரும்புவார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜாவை கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , பரிசோதனைக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், காலை நடைபயிற்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகவும், தேவையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும், முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாகவும் , 3 நாட்கள் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் நன்றாக உள்ளார். இரண்டு,மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக பயணங்கள் ரோட்ஷோ போனதால் தலை சுற்றல் இருந்தது. மருத்துவர்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர முடியாதது அவருக்கு மனதில் குறையாக இருந்தது. லைவில் இந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்துவிட்டு பேசினார். இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பூரண குணமடைந்து விரைவில் வீட்டுக்கு வருவார். நாளைக்கு ஒரு சில மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இரண்டு நாட்களில் சரியாகி வீடு திரும்புவார்” என்றார்.