×

சட்டப்பேரவையில் விலைவாசி உயர்வு பிரச்சனை: உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!

 

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தவெக ஆட்சி அமைந்தது முதலே விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அவர் பேசுகையில், “அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. அரிசி, பருப்பு, சர்க்கரை என அனைத்துப் பொருட்களின் விலையும் கடந்த 3 மாதங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, இந்த அரசு அமைந்ததிலிருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுடன் அச்சத்தில் மளிகைக்கடைகள் பக்கமே செல்லதில்லை என்ற தகவல் வருகிறது. ஆளும்கட்சியின் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளார்கள். எனவே இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தொடர்ந்து கருணாநிதி ஆட்சியில் விலைவாசி பிரச்சினை எவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டது என்பதையும் அவையில் எடுத்துரைத்தார்.

“2007ஆம் ஆண்டு தேசிய அளவில் விலைவாசி உயர்வு ஏற்பட்டபோது அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி, பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சிறப்பு பொது விநியோகத் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன் கடைகளில் அரிசி, எண்ணெய், ரவை உள்ளிட்ட பொருட்களை சந்தை விலையை விட குறைவான விலையில் அன்றைக்கு வழங்கினார்கள்.

ரேஷன் கடைகளில் சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்களை தற்போது வழங்கப்படும் அளவைவிட கூடுதலான அளவில் வழங்கிட அரசு ஆவண செய்ய வேண்டும். முதலமைச்சர் தலைமையில் நிதி, உணவு, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் துறையின் அமைச்சர்களும் அதிகாரிகளும் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஆலோசனை கூட்டத்தை நடத்தி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.