ஜனநாயக கடமையாற்றிய உதயநிதி ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
அதே போல் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள S.I.E.T. கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தார்.
அவருடன் மனைவி கிருத்திகா உதயநிதி, மகனும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான இன்பநிதி ஆகியோரும் வாக்க்குப்பதிவு செய்தனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் வாக்குப்பதிவு செய்த பிறகு தனது கையில் மை வைக்கப்பட்டதை செய்தியாளர்களுக்கு காண்பித்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்தபோது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “முதல் முறை வாக்காளர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களும் உங்களுடைய வாக்குகளை கட்டாயம் செலுத்த வேண்டும்” என்றார்.
முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் S.I.E.T. கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஜனநாயகக் கடமையை ஆற்றியது போல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை முறையாக தவறாமல் ஆற்ற வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.