×

தமிழக முதல்வர் விஜய்க்கு உதயநிதி சவால்..! தைரியம் இருந்தால் அந்த கோப்புகளை ஓபன் பண்ணுங்க..!

 

சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், 'போராளி ஓய்வதில்லை' என்ற தலைப்பில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து மக்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நமது தலைவர் கருணாநிதி, தன் வாழ்நாள் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்தவர். என்றென்றும் அவர் காட்டிய வழியில்தான் திமுக செல்லும். ஆளும் கட்சியாக இருந்த போதும் சரி, எதிர்க்கட்சியாக இருந்த போதும் சரி, என்றைக்கும் மக்களோடு மக்களாக நிற்கும் இயக்கம் திமுக மட்டும்தான்.

சட்டமன்றத் தேர்தல் முடிந்து 4 மாதங்களுக்கு பிறகுதான் சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு வருகிறேன். சேகர்பாபு மீது நான் கோபமாக இருக்கிறேன் என்று அவர் நினைத்து இருக்கலாம். அது கோபம் இல்லை. வருத்தம். அவர் மீதும், அவர் மாவட்டத்தின் மீதும் எனக்கு இருக்கும் உரிமையான வருத்தம் அது. திமுகவின் தோல்விக்கு எத்தனையோ காரணங்களை நாம் சொல்லி சமாதானம் அடையலாம். ஆனால் கொளத்தூர் தோல்வியை நாம் ஏற்றுகொள்ள முடியுமா ?

அதை நாம் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த தேர்தலில் நாம் மிகப்பெரிய வெற்றியை அடைந்து காட்ட வேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் நமது தயவில் ஆட்சிக்கட்டிலை பிடித்தவர்கள்தான். மாற்றம் மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து, தற்போது மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் பிரச்சனைகளை சட்டப்பேரவையில் எழுப்பினால், முதலமைச்சர் அவற்றுக்கு பதில் சொல்வதில்லை. எந்த துறையை பற்றி கேள்வி கேட்டாலும் 3 அமைச்சர்கள் தான் பதில் சொல்கிறார்கள். மின் கட்டணம் பற்றி பேரவையில் கேள்வி எழுப்பினால், அதற்கு பதில் சொல்ல முடியாத மின்துறை அமைச்சர் வேறு எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்.

பொதுவாக, சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினரை பார்த்து எதிர்க்கட்சியினர்தான் கேள்வி கேட்பார்கள். ஆனால், தற்போது ஆட்சியில் உட்கார்ந்து கொண்டு, எதிர்க்கட்சியை பார்த்து ஆளுங்கட்சியினர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றிலேயே முதல் முறையாக, எதிர்க்கட்சியை விட ஆளுங்கட்சியினர் பேசுவதை தான் சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறார்.

முதலமைச்சர் நம்மை மிரட்டுகிறாராம். அவரிடம் 3 கோப்புகள் இருக்கிறதாம். அதை திறக்க வைத்துவிடாதீர்கள் என முதலமைச்சர் சொல்கிறார். தயவுசெய்து அந்த கோப்புகளை திறங்க. யார் உங்களை திறக்க வேண்டாம் என சொன்னது? இப்போது சொல்கிறேன். தைரியம் இருந்தால் அந்த கோப்புகளை ஓபன் பண்ணுங்க பார்ப்போம்.

இப்போது இருக்கும் முதலமைச்சருக்கு யார் யார் எந்த தொகுதி எம்எல்ஏ என்றே தெரியாது. யார் யார் எந்த துறைக்கு அமைச்சர் என்று கூட தெரியாது. இந்த லட்சணத்தில் இவர் எல்லா எம்எல்ஏவுக்கும் கார் வாங்கி கொடுக்க போகிறாராம். திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் என்று சொன்னால், அதையும் ஒரு அமைச்சர் கிண்டல் பண்ணுகிறார்.

மக்களை மதிக்காத இந்த தவெக அரசுக்கு சரியான பாடத்தை நாம் கற்றுகொடுக்க வேண்டும். சரியான நேரத்தில் நீங்கள் அதை செய்வீர்கள் என்று நம்புகிறேன்" என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.