×

குதிரைப்பேரம் நடத்தியது உதயநிதியும் இபிஎஸ் மகன் மிதுனும் தான் - போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா..!

 

வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தவெக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, "தவெக குதிரைப்பேரம் நடத்தியதாகச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் மற்றும் ஒரு தொழிலதிபர் ஆகியோர் இணைந்துதான் அந்த வேலைகளைச் செய்தார்கள். அப்போது திடீரென உள்ளே வந்த கனிமொழி மேடம், 'இது என் அப்பா (கலைஞர்) உருவாக்கிய கட்சி, இப்படி அதிமுகவுடன் கைகோர்த்தால் நான் இப்போதே பதவியை ராஜினாமா செய்வேன்' என எச்சரித்தார். கனிமொழியிடம் இருக்கும் அந்த கொள்கை அரசியல் உதயநிதியிடம் கிடையாது.

திமுகவில் இருக்கும் சில நல்லவர்கள் அஇஅதிமுக-வோடு சேரக்கூடாது என உறுதியாகச் சொன்னதால்தான், ஸ்டாலின் எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என அறிக்கை விட்டார். ஐயா ஸ்டாலின் அவர்களே, நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட இருக்க வேண்டாம், அமைதியாக வீட்டில் ஓய்வெடுங்கள். இந்த தேர்தலோடு உங்களின் அரசியல் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது" எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், "மே 10-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்க இபிஎஸ் திட்டமிட்டார். ஆனால் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சிகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டன. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா எதற்காகக் கட்சியைத் தொடங்கினார்களோ, அதற்கு எதிராகச் செயல்பட்டு எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் ரகசியமாகச் சேர்ந்துகொண்டார். விஜய் முதலமைச்சராக வரக்கூடாது என்பது மட்டுமே இபிஎஸ்-ஸின் ஒரே நோக்கமாக இருந்தது" என்றார்.

இறுதியாக உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜூனா, "தமிழக வரலாற்றில் திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றதே இல்லை. அன்றைக்கு கொளத்தூரில் நான் கேட்டதையே இப்போதும் கேட்கிறேன். கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலினால் முடியாத ஒரு காரியத்தை, வெறும் 'அரசியல் ஞானி' போல வேடம் போடும் உங்களால் சாதிக்க முடியுமா? எங்கள் தலைவர் விஜய்யை உங்களால் ஒருபோதும் வீழ்த்த முடியாது" என ஆவேசமாகப் பேசினார்.

சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களைப் பிடித்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் அமமுகவினர் முன்வைத்த குதிரைப்பேரப் புகார்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அளித்த இந்தப் பதில் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.