விசித்திரமான போக்குவரத்து விதி : செருப்பு அணிந்து டூ-வீலர் ஓட்டினால் ரூ.1000 அபராதம்..!
இந்தியாவில் பலருக்கும் அதிகம் தெரியாத சில போக்குவரத்து விதிகள் பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது ஹெல்மேட் கட்டாயம், கார் பயணத்தின் போது சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என பொதுவான விதிகள் குறித்து பலரும் அறிந்திருப்போம். ஆனால் உங்களுக்குத் தெரியுமா, இந்தியாவின் போக்குவரத்து சட்டத்தின் படி, நீங்கள் செருப்பு அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்ட அனுமதி இல்லை.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இந்தியாவில் சவாரி செய்யும் போது அல்லது வாகனம் ஓட்டும் போது நீங்கள் அதற்குரிய சரியான உடைகளை அணிய வேண்டும். விதிகளின்படி, இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில் செல்லும்போது முழுமையாக மூடிய காலணிகளை அணிய வேண்டும். வாகனத்தை ஓட்டுபவர் செப்பல் அல்லது செருப்பு அணிந்து வாகனம் ஓட்டக்கூடாது. இந்த விஷயத்தில் ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதேபோல், வாகனம் ஓட்டும் போது, பின்னால் அமர்ந்திருப்பவர் முழு நீள கால்சட்டையுடன் கூடிய சட்டை அல்லது டி-சர்ட்டை அணிய வேண்டும். இல்லையெல் அவர்களுக்கு ரூ 2,000 அபராதம் விதிக்கப்படலாம்.
இந்தியாவில் அதிக அளவில் நடக்கும் போக்குவரத்து விதிமீறல்களில் ஒன்று, வாகனத்தை இயக்கிக்கொண்டிருக்கும் போதே செல்போன் பேசுவது ஆகும். இதனால் ஓட்டுநர்களிடம் கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் இது போக்குவரத்து விதிகளின் படி தண்டனைக்குரிய குற்றமாக உள்ளது. ஆனால் இந்த போக்குவரத்து விதியில் இருந்து சில காரணங்களுக்காக விலக்கு உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?. எந்த ஒரு வாகனத்தின் ஓட்டுநராக இருந்தாலும், வழி கேட்பதற்காக சம்பந்தப்பட்ட நபருக்கு போன் செய்து பேசிக்கொண்டே வாகனம் ஓட்டலாம். வேறு எந்த காரணத்திற்காகவது செல்போன் பயன்படுத்தினால் கண்டிப்பாக ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.