×

இரண்டு தமிழ் பிரபலங்களுக்கு அரசு பதவி..! 

 

ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி அகோரம், பாடகர் வேல்முருகன் ஆகியோர் அறங்காவலர் நியமனக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் வரும் கோயில்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களை பரிசீலித்து, பரம்பரை அல்லாத அறங்காவலர்களாக நியமிக்க 7 பேர் கொண்ட குழுவை அறநிலையத்துறை நியமித்துள்ளது. இந்த 7 பேரில் அர்ச்சனா கல்பாத்தியும், பாடகர் வேல்முருகனும் அடங்குவர்.

இந்தக் குழுவின் தலைவராக மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி கே. ராமநாதன் இக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

குழுவின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ப.ரா. சம்பத், ஆன்மீக சொற்பொழிவாளர் சுமதி ஸ்ரீ, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ‎‎அர்ச்சனா கல்பாத்தி அகோரம், பாடகர் வேல்முருகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், 'பிகில்', 'கோட்' போன்ற நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் அறியப்படுவர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம்.