வாட்டர் வாஷ் செய்யும் போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு
தியாகதுருகம் அருகே வாட்டர் வாஷ் கடையில் உரிமையாளரின் காரை வாட்டர் வாஷ் செய்யும் பணியின் போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அண்ணாநகர் பகுதியில் கலிபுல்லா என்பவர் வாட்டர் வாஷ் கடை நடத்தி வரும் நிலையில் அதில் தென்கீரனூரை சேர்ந்த அரவிந்த் மற்றும் தியாகதுருகம் கரீம்ஷா தக்கா பகுதியை சேர்ந்த ஷாகில் இருவரும் பணியாற்றி வந்தனர். நேற்று இரவு வாட்டர் வாஷ் கடையின் உரிமையாளர் கலிபுல்லாவின் காரை அரவிந்த் வாட்டர் வாஷ் செய்து கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக அரவிந்த் மீது மின்சாரம் தாக்கிய நிலையில் அவரை காப்பாற்றுவதற்காக சென்ற ஷாகில் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் போதிய சிகிச்சை அளித்து வந்த போதிலும் அடுத்தடுத்து அரவிந்த் மற்றும் ஷாகில் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாட்டர் வாஷ் கடையில் பணியின் போது ஒருவர் மீது மின்சாரம் தாக்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்ற உடன் பணியாற்றும் நபர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.