கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி! சாலையோரம் நின்று சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சோகம்
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கார் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் கணேசன் (56). பைனான்சியர் மற்றும் தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி நிர்மலா (50) ஆசிரியை. இவர்களது மகனின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக திருமண பத்திரிகை கொடுப்பதற்காக கணவன் மனைவி 2 பேரும் சேலத்தில் இருந்து ஓசூருக்கு நேற்று வந்து கொண்டிருந்தனர். காரை சேலத்தை சேர்ந்த சிவசங்கர் (56) என்பவர் ஓட்டி வந்தார். அவர்கள் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி அருகே சின்னாறு பக்கமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சாப்பிடுவதற்காக காரை சாலையோரமாக நிறுத்தினார்கள். பின்னர் அவர்கள் தாங்கள் எடுத்து வந்த உணவை சாலையோரமாக நிழலில் நின்றவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த நேரம் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி வேகமாக சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று வேகமாக சாலையோரமாக நின்ற கணேசன், சிவசங்கர் மற்றும் காரின் மீது மோதியது. இந்த விபத்தில் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். சிவசங்கர் படுகாயம் அடைந்தார். நிர்மலாவும் காயம் அடைந்தார். அந்த நேரம் அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விபத்தில் காயம் அடைந்த சிவசங்கர் மற்றும் நிர்மலா ஆகியோரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணேசனின் மனைவி நிர்மலா சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்தில் இறந்த கணேசனின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரியை சேலத்தை சேர்ந்த கங்காதர் (45) என்பவர் ஓட்டி வந்ததும், அவர் மது போதையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதும் தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான கணேசனின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தம் ஆகும். அவர் குரால்நத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். சேலம் கன்னங்குறிச்சியில் குடியிருந்து வந்த அவர் பைனான்ஸ் தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். விபத்து தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.