தேனி அருகே பயங்கர விபத்து: அரசுப் பேருந்து மீது கார் மோதி இருவர் பரிதாப பலி!
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே மூன்று பேருடன் சென்றுக் கொண்டிருந்த கார், தனக்கு முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றபோது எதிரே குமுளியில் இருந்து தேனி புதிய பேருந்து நிலையம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரின் மீது பயங்கரமாக மோதியது.
விபத்து குறித்து வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனி காவல்துறையினர், காரில் இருந்த மூன்று பேரையும் மீட்டனர். இதில் முத்துக்குமார் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த வேலுச்சாமி (வயது 55), கந்தவேலு (வயது 52) ஆகியோரை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், செல்லும் வழியிலேயே வேலுச்சாமி உயிரிழந்தார். மருத்துவமனையில் கந்தவேலு தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அதேபோல், உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், விபத்து குறித்து தேனி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், "கார் அதிவேகமாக இயக்கப்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது; அதேபோல், உயிரிழந்த முத்துக்குமார், அமச்சியாபுரம் பகுதியில் பைனான்ஸ் தொழில் நடத்தி வருகிறார். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்த வேலுச்சாமி, அரண்மனைபுதூர் பகுதியை சேர்ந்தவர்" என்பது தெரிய வந்துள்ளது.