ஆவடியில் விஷ வாயு தாக்கி இருவர் பலி
ஆவடியில் விஷ வாயு தாக்கி இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அடுத்த அரக்கம்பாக்கம் சாலை, பாண்டேஸ்வரம் பகுதியில் நட்ராஜ் (54) என்பவர் ஐந்து ஆண்டுகளாக 'நியாமி புட் இண்டஸ்ட்ரிஸ்' என்ற பெயரில் வெங்காயம் குடோன் நடத்தி வருகிறார். இங்கு வெங்காயத்தை நீரில் கழுவி, சிப்ஸ் செய்வது போல் நீள வாக்கில் நறுக்கி, இயந்திரத்தின் வாயிலாக உலர்த்தி கவர்களில் பேக் செய்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். வெங்காயத்தை கழுவும் கழிவு நீர் அங்குள்ள 15 அடி ஆழ தொட்டியில் தேக்கி வைக்கப்படுகிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை அந்த தொட்டி சுத்தம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று அந்த கழிவு நீர் தொட்டியை பாண்டேஸ்வரம், கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் (34) மற்றும் அருண் (30), ஆகியோர் உள்ளே இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, லாரியில் வெங்காயம் லோடு இறக்கி கொண்டிருந்தவர்கள் தொட்டியில் இறங்கி கயிறு கட்டி இருவரையும் மீட்டனர். தகவலறிந்த ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார், இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விஷ வாயு தாக்கி இறந்தனரா அல்லது மின்சாரம் பாய்ந்து இறந்தார்களா என விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் ஆவடி தீயணைப்பு துறையினர், தடவியல் நிபுணர்கள், வருவாய் துறையினர் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.