×

"இரண்டரை ஆண்டுகளில் ரூ.2 கோடி மருத்துவ நிவாரண நிதி" - மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் சொல்லும் முக்கிய தகவல்!

 

இரண்டரை ஆண்டுகளில் இரண்டு கோடி ரூபாய் மருத்துவ நிவாரண நிதி 86 நபர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளோம். என்று சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தீவிர நோய்கள் என அறியப்படுபவைக்கும் , தனிநபரால் தாங்க இயலாத நிதிச்சுமையை ஏற்படுத்தும் மருத்துவ தேவைகளுக்கும் உதவுவது மிக அடிப்படையானது.

அதன்படி பிரதமர் தேசிய நிவாரண நிதியின் கீழ் கடந்த பல ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நாள் முதல் ஏராளமானோர் மருத்துவ உதவி கோரிய விண்ணப்பங்களை அளித்து வந்தனர்.அந்த விண்ணப்பங்களுக்கு மருத்துவ நிவாரணத்தினை ஒன்றிய அரசிடம் கோரி பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தோம்.

2019ம் ஆண்டு 45 பேரும் , கொரோனா ஊரடங்கு காலமான 2020ம் ஆண்டு 37 பேரும் , 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 54 பேர் என மொத்தம் 136 பேர் இந்தக் காலத்தில் அலுவலகத்தில் உதவி கோரியிருந்தனர். அவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு உடனுக்குடன் மருத்துவ நிவாரணம் கிடைக்கும் வகையில் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அதன் அடிப்படையில் இதுவரை 86 பேருக்கு ரூபாய் 2 கோடியே 3 லட்சத்து 38 ஆயிரத்து ஐநுாறு உதவித் தொகை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சராசரியாக ஒவ்வொரு நோயாளிக்கும் ரூபாய் 2 லட்சத்து 36 ஆயிரத்து ஐநுாறு தொகை இதுவரை பெறப்பட்டுள்ளது. இன்னும் 50 மனுக்களுக்கு உதவித்தொகை வரவேண்டி உள்ளது.உரிய மருத்துவக் காப்பீடுகளும், சிகிச்சைகளும் நம் தேசத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் முழுமையாக கிடைத்திடும் வரையில் இதுபோன்ற மருத்துவ நிவாரண உதவிகள் அதிகமான அளவிலும், உடனுக்குடனும் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.