நடிகை ராதிகா வீட்டுப் பணிப்பெண் மகன் கொலை - இருவர் கைது..!
விழுப்புரம் பண்ருட்டி அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் - எழில்செல்வி தம்பதியரின் மகன் பிரசாந்த் (வயது 19). எழில்செல்வி சென்னையில் உள்ள நடிகர் சரத்குமார் ராதிகா வீட்டில், வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது மகன் பிரசாந்த், அதே ஊரைச் சேர்ந்த தனது மாமா ரமேஷ் என்பவருடன், டைல்ஸ் போடும் பணிகளில் கடலூர், பண்ருட்டி மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 27-ஆம் தேதி பிரசாந்த் சென்னையில் உள்ள தனது தாயாரை பார்க்க செல்வதாக தனது வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். பின்னர் பிரசாந்த் வீடு திரும்பவில்லை என அவரது மாமா ரமேஷிற்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், தனது மருமகனை காணவில்லை என புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிரசாந்த்தை தேடியுள்ளனர். அப்போது பிரசாந்தின் செல்போன் அழைப்புகளை வைத்து, கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சிறுத்துறை கிராமத்தைச் சேர்ந்த தேவராசு (18), தினேஷ் (23) ஆகிய இருவரும் பிரசாந்த் அவர்களிடம் கடைசியாக பேசியது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் இருவரிடமும், விசாரணை நடத்தியதில், முதல் கட்ட தகவல் அடிப்படையில் பிரசாந்த் உட்பட இவர்கள் மூவரும் நண்பர்கள் என தெரியவந்தது. தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி பிரசாந்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கடற்கரைக்கு வரவழைத்து, கொலை செய்து மண்ணில் புதைத்ததாக ஒப்புக் கொண்டனர். தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து நேற்றைய தினம் பொன்னிரி கடற்கரை பகுதியில், பிரசாந்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக பண்ருட்டி, புதுப்பேட்டை காவல் துறையினர் கைது செய்யப்பட்ட இருவரிடமும் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.