தவெக 2வது மாநில மாநாடு - அதிகாலையில் நடந்த பந்தல்கால் நடும் விழா..!
தமிழக வெற்றிக் கழகத்தின் 2 வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ள நிலையில், இன்று பூமி பூஜை நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. பிரதான கட்சிகள் தங்கள் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றன. அந்த வரிசையில் கடந்த ஓன்றரை ஆண்டுக்கு முன்பு புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. கட்சிக்கான அணிகள் உருவாக்கப்பட்டு, அதற்கான நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் முழுமையடைந்துவிட்ட நிலையில், மாநாடு, மக்களை சந்திப்பது என அடுத்தக்கட்டத்திற்கு கட்சியை நகர்த்துகிறார் விஜய்.
ஏற்கனவே கடந்த ஆண்டு தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து தென் மாவட்டங்களை மையப்படுத்தி பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. அதுவும் மதுரையில் தனது 2வது மாநாட்டை நடத்தவுள்ளது தவெக. மதுரை அடுத்த ஆவியூர் பகுதியில் பிரம்மாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக நேற்று தவெக பொதுச் செயலாளர் புஸ்சிஆனந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்குச் சென்றார். இந்நிலையில் மதுரை வந்துள்ள ஆனந்த் மாவட்ட எஸ்பி அலுவலகம் அல்லது மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்துக்குச் சென்று மாநாட்டிற்கான அனுமதி குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பேச இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.