“காசு கொடுத்தால் பதவி... என் உயிருக்கு ஆபத்து”- விபரீத முடிவு எடுத்த தவெக மகளிர் அணி நிர்வாகி
மதுரை தவெக நிர்வாகி S.R.தங்கப்பாண்டியால் என் உயிருக்கு ஆபத்து என பெண் நிர்வாகி வீடியோ வெளியிட்ட நிலையில், அரசியல் உள் நோக்கத்தோடு என் மீது குற்றம்சாட்ட படுவதாக S.R.தங்கப்பாண்டி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், மதுரை தெற்கு மாவட்ட செயலாளருமான S.R.தங்கப்பாண்டி மீது பெண் நிர்வாகி ஷர்மிளா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார், அதில் "தமிழக வெற்றிக் கழகத்தில் S.R.தங்கப்பாண்டி சாதி பார்த்து பதவி வழங்குகிறார். வசதியான பெண்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வழங்கி உள்ளார். கடன் பிரச்சினைகளை தீர்க்க S.R.தங்கப்பாண்டி பெண் நிர்வாகிகளிடம் பணம் வாங்கினார். என்னுடைய நகைகளை அடகு வைத்து S.R.தங்கப்பாண்டிக்கு பணம் கொடுத்துள்ளேன்.16 லட்சம் ரூபாய் ஐடி கம்பெனியில் முதலீடு செய்ய வலியுறுத்தியதால் இடத்தை அடமானம் வைத்து கட்டியதாகவும்,அதிலிருந்து பணம் தராமல்
ஏமாற்றுவதாக வட்டி கட்ட முடியாமல் நகைகளை விற்று விட்டேன், ஒரு காலகட்டத்தில் முடியாமல் தற்கொலைக்கு முயற்சித்தேன், என்னுடைய பணத்தை பெற்றுத் தாருங்கள். S.R.தங்கப்பாண்டி மீது புகார் தெரிவித்து இருப்பதால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனக்கு எதுவும் நடந்தால் S.R.தங்கப்பாண்டியும், அவரை சுற்றி உள்ளவர்கள் தான் பொறுப்பு. புஸ்ஸி ஆனந்த் பெயரைச் சொல்லி மகளிர் அணியில் இருந்து என்னை மாற்றினார். நன்றாக பணியாற்ற கூடியவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் செயல்படக் கூடாதா?, வேலை வெட்டி இல்லாமல் தண்டமாக இருக்கக்கூடியவர்கள் மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வைக்க வேண்டுமா? யார் அதிகமாக பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பதவி வழங்கப்படுகிறது. என்னை விட முத்துலட்சுமி என்கிற பெண் அதிகமாக பணம் கொடுத்ததால் அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களைப் போன்றவர்களால் தமிழக வெற்றி கழகம் ஊழல் கட்சி என்கிற பெயரெடுக்கும். S.R.தங்கப்பாண்டி மீதான புகார்களை தலைமை விசாரிப்பதில்லை" என தெரிவித்து உள்ளார்.
புகார் தொடர்பாக S.R.தங்கபாண்டியிடம் விளக்கம் கேட்டபோது, "தமிழக வெற்றி கழக தலைமையில் இருந்து இன்னும் மகளிரணி பொறுப்புக்கு யாரையும் நியமிக்கவில்லை. கட்சியில் பணிகளை தொடர்ந்து செய்து வாருங்கள் உங்களுக்கான பொறுப்பு வந்து சேரும் என்று தான் கூறி வருகின்றோம். தற்போது என் மீது புகார் அளித்த பெண் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக இருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். நான் இதுவரை அந்தப் பெண்ணிடம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை. அரசியல் நோக்கத்தோடு என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இதுபோன்ற பொய்யான புகார்களை வீடியோவாக வெளியிட்டு பரப்பி வருவதாக" தெரிவித்தார்.