சீரடி செல்கிறார் விஜய்
தவெக தலைவர் விஜய், இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ததை தொடர்ந்து நாளை சீரடி செல்கிறார்.
தமிழகத்தில் கடந்த 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மூன்று அல்லது நான்கு மாவட்டங்கள் சேர்த்து ஒரே இடத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த பிறகு முதல் முறையாக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று நள்ளிரவு தனி விமான மூலம் சென்னையில் இருந்து கிளம்பினார். மதுரை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விஜய் தனி கார் மூலம் மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை பைபாஸ் சாலை மார்க்கமாக திருச்செந்தூர் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு விஜய் வடக்கு வாசல் வழியாக புறப்பட்டு சென்றார்.
இந்நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு தவெக தலைவர் விஜய், சீரடி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே.4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இந்த ஆன்மீக பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக, ‘தி கோட்’ பட ரிலீஸ் மற்றும் தவெகவின் முதல் மாநாடு பணிகளுக்கு நடுவே, சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்று விஜய் தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது