நகராட்சி கமிஷனர் சீட்டில் அமர்ந்து தவெக பெண் எம்எல்ஏ அடாவடி
குடியாத்தம் நகராட்சி ஆணையர் நாற்காலியில் அமர்ந்து தவெக சட்டமன்ற பெண் உறுப்பினர் அட்ராசிட்டி செய்தது சக அதிகாரிகளை முகம் சுழிக்க செய்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றம் தனி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சிந்து என்பவர் வெற்றி பெற்றார். இவர் தேர்தலின் போது வாக்கு சேகரிக்க தொகுதி முழுவதும் செல்லவில்லை. வெற்றி பெற்ற பின்னர் நன்றி தெரிவிக்கவும் செல்லவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது தொகுதி மக்கள் எம்எல்ஏ சிந்துவின் முகம் கூட காணாமல் வாக்களித்தது தவறாகிவிட்டது என புலம்பி வருகின்றனர். இந்நிலையில் எம்எல்ஏ சிந்து குடியாத்தம் பஸ் நில யம் அருகில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு இன்று சென்றார். அப்பொழுது நகராட்சி கமிஷனர் அறைக்குள் சென்று அவரது இருக்கையில் அமர்ந்துள்ளார். பின்னர் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியை இன்னொரு நாற்காலி போட்டு அமர வைத்துவிட்டு தற்போது என்ன வளர்ச்சி திட்ட பணிகள் நடக்கிறது? என கேட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.
இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிந்து அப்லோட் செய்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் உடனடியாக அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சிந்து நீக்கிவிட்டார். எம்எல்ஏ, நகராட்சி ஆணையாளரின் இருக் கையில் அமரக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து பதிவு செய்து வருகின்றனர். அதில் தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின்படி நகராட்சி கமிஷனர் தான் நகராட்சி யின் நிர்வாகத் தலைவர். சட்டமன்ற உறுப்பினருக்கு நகராட்சி கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் அந்தஸ்து தான். சட்டமன்ற உறுப்பினர், கமிஷனர் அறையில் அவரது தலைமையில் கூட்டம் நடத்தலாம். ஆனால் கமிஷனர் நாற்காலியில் அமரக்கூடாது. மக்கள் பிரச்னைகளை கமிஷனரிடம் தெரிவிக்கலாம். இதுபோன்று அட்ராசிட்டி செய்வது சட்டப்படி தவறு, அதிகார துஷ்பிரயோகம் என்பது உள்ளிட்ட கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.