×

சுதந்திர தின அணிவகுப்பில் மயங்கமடைந்து உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம்

 

சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது மயக்கமடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப்பயிற்சி மையத்தின் இசைக்குழுவைச் சேர்ந்த முதல்நிலைக் காவலர் திரு.A.தர்மராஜ் (வயது 56) நேற்று (15.08.2026) புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்புப் பணியின்போது திடீரென மயங்கி விழுந்து சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

முதல்நிலைக் காவலர் திரு.A.தர்மராஜ் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல் துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.திரு.A.தர்மராஜ் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.