தவெகவுக்கு 45% வாக்குகள், 140க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி நிச்சயம்- விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட்
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனையடுத்து தவெக தலைவர் விஜய் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அதிகாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்ற விஜய், கடலில் நீராடிய பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று அவர் சீரடி கோயிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து வரும் 30ஆம் தேதி 232 தொகுதி தவெக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
இந்நிலையில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து, தமிழக வெற்றி கழகத்தின் (TVK) செய்தித் தொடர்பாளர் மற்றும் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ராதன் பண்டிட் கூறுகையில், “நாங்கள் இந்தக் கருத்துக் கணிப்புகளைப் புறக்கணிக்கிறோம். இந்தத் தேர்தலில் நாங்கள் 170 அல்லது 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறுவோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறேன். நாங்கள் நன்றாக ஆய்வு செய்தோம். நாங்கள் தனிப்பட்ட முறையில் கணக்கெடுப்பு நடத்தினோம். குறைந்தபட்சம் 45 சதவீத வாக்குகள் பதிவாகும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்..தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 108 மணி நேரம் உள்ளது... 109-வது மணி நேரத்தில், நாங்கள் பதவியேற்கப் போகிறோம். எங்கள் விஜய் அசாதாரணமாக முதலமைச்சர் ஆவார்” எனக் கூறினார்.