×

‘முதல்வர் சொன்ன சொல்லை தட்டாத விஜய்’- டிச.9-ல் தவெக பொதுக்கூட்டம்! 10,000 பேருக்கு அனுமதி...

 

வருகிற‌ 9-ந் தேதி விஜய் பொதுக்கூட்டம் நடத்தவுள்ள நிலையில் புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் மைதானத்தை சீரமைக்கும்  பணிகள் தொடங்கியது. அதிகபட்சமாக 10 ஆயிரம் பேரை மட்டும் கியூ ஆர் கோடு மூலம் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற பல கடும் நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.

புதுச்சேரியில் இன்று தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார். இதற்காக புதுவை காவல்  துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் சென்னை ஐகோர்ட்டில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது. அதேநேரத்தில் பொதுகூட்டம் நடத்த அனுமதி தரப்படும். பொதுகூட்டத்தையும் டிசம்பர் 2வது வாரத்துக்குள் நடத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் புதுவையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி விடுமுறைகாலம் தொடங்கும் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்கள் ஏற்கனவே அறைகளை முன்பதிவு செய்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டமும் விமரிசையாக நடைபெறும் என்பதையும் போலீசார் சுட்டிக்காட்டியிருந்தனர். முதல் அமைச்சர் ரங்கசாமியும், ரோடு ஷோவை தவிர்த்து பொதுக்கூட்டம் நடத்தும்படி தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்திடம் தெரிவித்தார். 

இதையடுத்து வரும் 9ந் தேதி உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த தவெக திட்டமிட்டனர். இதற்கு அனுமதி வழங்கக்கோரி நேற்று பிற்பகலில் தவெகவினர் காவல்துறையிடம் மனு அளித்தனர். இதையடுத்து நேற்று மாலை டிஐஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பிக்கள் கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன், போலீஸ் சூப்பிரெண்டுகள் ரகுநாயகம், ஸ்ருதி,  ரச்சனா சிங், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து உள்ளிட்டோர் துறைமுக வளாகத்தை ஆய்வு செய்தனர். அந்த மைதானத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்தும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கான வழிமுறைகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் பொதுக்கூட்டம் நடத்துவதிலும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. டித்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் துறைமுக வளாகத்தில் ஆங்காங்கே குளம்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. பொதுக்கூட்டம் நடத்த தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று காலையிலும் லேசான மழை பெய்தவண்ணம் உள்ளது.

ஒருவேளை தண்ணீரை வெளியேற்றினாலும், மழை பெய்தால் மீண்டும் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்படும்.  இதுதொடர்பாக புதுவை காவல்துறையினர், தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம் தெரிவித்துள்ளனர். மேலும் இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மேடை அமைக்கும் பணி நடைபெற வேண்டும். மழை இல்லாமல் இருந்தால்தான் அந்த பணியை மேற்கொள்ள முடியும். இந்த நிலையில் இன்று காலை தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து, முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன், கட்சி நிர்வாகிகள், ஓதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் துறைமுக வளாகத்துக்கு வந்தனர். வழக்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் மைதான பகுதி சேறும், சகதியுமாகவும், புற்கள் முளைத்தும் காணப்பட்டது. அங்கிருக்கும் சேறை அகற்றி, மண் கொட்டி சமன்படுத்துவது கஷ்டம்.

பொதுக்கூட்டம் நடத்த பல்வேறு நிபந்தனைகளையும் போலீசார் தெரிவித்தனர். பொதுக்கூட்டம் நடக்காத பகுதியை முழுமையாக மறைக்க வேண்டும். துறைமுகம் செல்லும் சாலையை போக்குவரத்துக்கு விட வேண்டும்.  கூட்டத்துக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் பேரை மட்டும் கியூ ஆர்கோடு மூலம் மட்டும் அனுமதிக்க வேண்டும். விஐபி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள், பொதுமக்களுக்காக தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்த வேண்டும். கார்கள் வந்து செல்ல தனி வழி ஏற்படுத்த வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். இதையடுத்து மைதானத்தில் தண்ணீரை வெளியேற்றி சமன்படுத்த பொக்லைன் எந்திரங்கள், டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணி நடக்கிறது.


இதனிடையே தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து, முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் அவரின் அறையில் சந்தித்து, பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். பின்னர் வெளிய வந்த புஸ்சி ஆனந்த் நிருபர்களிடம் திட்டமிட்டபடி  9ந் தேதி பொதுகூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.