பள்ளிவாசலுக்கு சென்று பிரார்த்தனை செய்த தலைவர் விஜய்
த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் ஏப்ரல் 2-ஆம் தேதி திருச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு மரக்கடை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் பின் மீண்டும் இன்று மதியம் 3 மணி முதல் 8 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கூறியிருந்தனர் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.
அதனைத் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள விஜய் சென்னையில் இருந்து தனி விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். திருச்சி விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலையில் இருந்து அவர் ரோடு ஷோ வை தொடங்கினார். வயர்லெஸ் சாலை கேகே நகர் காஜாமல கொட்டப்பட்டு ஆகிய பகுதிகள் வழியாக மதியம் மூன்று முப்பது மணி முதல் 5.30 மணி வரை ரோடு ஷோ செய்துவிட்டு மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். ரோடு ஷோவிற்கு வரும்பொழுது அங்கு திரண்டு இருந்த அவருடைய ரசிகர்கள் விஜயை உற்சாகமாக வரவேற்றனர். அவருக்கு பல இடங்களில் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
ரோடு ஷோ செய்யும் பொழுது வயர்லெஸ் சாலையில் உள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு சென்ற விஜய் அங்கு மண்டியிட்டு வழிபாடு செய்தார். அதேபோல கேகே நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்று பள்ளிவாசலில் உள்ள நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் கொட்டப்பட்டியில் உள்ள பச்ச நாச்சியம்மன் கோவிலுக்கு சென்று அங்கும் வழிபாடு செய்தார். தேர்தல் நேரத்தில் விஜய் 234 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்வார் என அக்கட்சியினர் தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர், பெரிதாக எங்கும் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை. அவர் போட்டியிடக்கூடிய திருச்சி கிழக்கு தொகுதியில் கூட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பொழுது பிரச்சாரம் செய்துவிட்டு சென்றார் என்கிற விமர்சனம் தொடர்ந்து இருந்து வந்த நிலையில் விஜய் இன்று பிரச்சாரத்திற்காக வந்தார். ஆனால் மக்களிடம் எதுவும் பேசாமல் அவர் ரோட் ஷோ மட்டும் செய்துவிட்டு சென்றார். 5 மணி நேரத்திற்கு அனுமதி வாங்கிவிட்டு இரண்டு மணி நேரத்தில் ரோடு ஷோவை முடித்துவிட்டு புறப்பட்டு சென்றார். திருச்சி வந்த விஜய்யை காண திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கரூர் அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வருகை தந்தனர்.