ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் - விஜய் இரங்கல்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு ஏற்கனவே இதயம் தொடர்பான பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் இது தொடர்பாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நுறையீரலில் உள்ள சளி காரணமாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.