ஒரே பேனரில் ஈபிஎஸ், விஜய்! தவெகவினரின் செயலலால் பரபரப்பு
தவெக சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் எடப்பாடி பழனிசாமி மற்றும் விஜய்யின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
அண்மையில் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் சம்பவத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். மேலும் அரசுக்கு எதிராக தனது கருத்துக்களை கூறிவருவதால் தவெகவினர் எடப்பாடி பழனிசாமியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தருமபுரிக்கு பரப்புரைக்கு மேற்கொள்ளவரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக, தமிழக வெற்றி கழகத்தின் காரிமங்கலம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் டி. செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று தனது புகைப்படத்துடன் பேனர் வைத்துள்ளார். அந்த பேனரில் 'தமிழக வெற்றி கழகம் சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனி சாமி அவர்களே வருக வருக என வரவேற்கிறோம்' என பதிவிட்டு ஒரு முனையில் விஜய் தலையில் பச்சை துண்டுடன் கை கூப்பி வணங்குவது போலவும் மறுமுனையில் எடப்பாடி பழனிசாமி பச்சைத் துண்டுடன் வழங்குவது போலவும் வைத்துள்ளார்.