×

“சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 10.5% உள்-ஒதுக்கீடு, சுங்கச்சாவடி அகற்றம்”- திமுகவிடம் கோரிக்கைகளை அடுக்கும் வேல்முருகன்

 

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி (தவாக) மறுபரிசீலனை செய்து வருவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற கட்சியின் அரசியல் தலைமை குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், “வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளில் போட்டியிட திமுகவிடம் கூறினோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் திமுக தரப்பிலிருந்து வரவில்லை. ​கடந்த நான்கு தேர்தல்களாக திமுக தலைமையிலான கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி உண்மையாக உழைத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியை நாங்கள் கோரியபோதும், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் உரிய இடங்கள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலிலும் கூடுதல் இடங்கள் வழங்க திமுக தயக்கம் காட்டி வருகிறது. தொகுதிகளை விடவும் தமிழ் சமூகத்தின் நலன் சார்ந்த 10 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களது முதன்மையான நோக்கம், திமுக இதை பரிசீலிக்க வில்லை என்றால் யார் எங்களுக்கு கோரிக்கைகளை நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கிறார்களோ அவருடன் கூட்டணி தொடர்வது குறித்து பரிசீலித்து ஆலோசிக்கப்படும்

தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். ​தமிழக அரசுப் பணிகளில் 100% தமிழர்களுக்கே வேலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும், ​சிறை முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,தமிழகத்தில் உள்ள அனைத்துச் சுங்கச்சாவடிகளையும் அகற்ற வேண்டும், நீண்டகாலமாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், ​தமிழகக் கோவில்களில் தமிழில் அர்ச்சனை மற்றும் குடமுழுக்கு நடைபெற வேண்டும், ​பூரண மதுவிலக்கை நோக்கி டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும், தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலை என அறிவித்து பொதுவாக்கெடுப்பு நடத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.  இந்தக் கோரிக்கைகள் குறித்து திமுகவிடமிருந்து இதுவரை முறையான பதில் கிடைக்கவில்லை. வரும் திங்கட்கிழமைக்குள் திமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். ஒருவேளை எங்களது கொள்கை ரீதியான கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், கூட்டணியில் நீடிப்பது குறித்து இறுதி முடிவை மேற்கொள்வோம். எங்கள் கொள்கைகளை ஏற்கும் பிற கட்சிகளுடன் (பாஜக தவிர்த்து) கூட்டணி அமைப்பது அல்லது 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது குறித்து கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ள நான் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொள்கை அடிப்படையில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பயணிக்கத் தயார்... ஆனால் பாஜக தலைமை ஏற்கும் கூட்டணியில் எந்தச் சூழலிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி இணையாது. மேலும் நாம் தமிழர் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் தற்போதைக்கு கூட்டணி செல்ல முடிவெடுக்க வில்லை. திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்ததில் எந்த நெருடலும் இல்லை. தங்களுக்கு தொகுதிகளை விட கோரிக்கைகள் நிறைவேற்றுவது தான் முக்கியம்” என்றார்.