“பாஜகவின் மற்றொரு வடிவம் தவெக”- பரபரப்பு குற்றச்சாட்டுடன் திமுகவில் இணைந்த வைஷ்ணவி
தவெகவில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. பட்டதாரியான இளம் பெண்ணான இவர், இன்ஸ்டா, எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்த போது, விஜய் ரசிகையான தன்னையும் தவெகவில் இணைத்துக் கொண்டார். தொடர்ந்து கட்சி மற்றும் அரசியல் தொடர்பாக சமூக வலைதளங்களில் எழுதி வரும் வைஷ்ணவியை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தவெகவில் இளம் பெண்கள் ஓரம் கட்டப்படுவதாகவும், பெண்களே அரசியலுக்கு வரக்கூடாது என்பது போல மாவட்ட நிர்வாகிகள் நடந்து கொள்வதாக கூறி, தவெகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தவெகவில் இருந்து வெளியேறிய வைஷ்ணவி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதுகுறித்து கருத்துக் கூறியுள்ள வைஷ்ணவி, “தவெகவில் ஒரு வருடமாக பயணித்தேன். இளைஞர்களை ஊக்குவிப்பார்கள் என்று நினைத்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. தவெகவின் மற்றொரு திரை பாஜக என்பதால்தான் திமுகவில் இணைந்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.