×

அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியானது ‘தவெக’

 

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக தமிழக வெற்றி கழகத்தை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்தது.

கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுக்குள், சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை வென்று,  34.92 வாக்கு சதவீதம் பெற்று தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக தவெக உருவெடுத்தது தமிழக அரசியலில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக வெற்றிக்கழக தேர்தல் சின்னமான விசில் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் உறுதி செய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7 உயர்ந்துள்ளது. திமுக, அதிமுக, சிபிஐ, விசிக, நாதக, தேமுதிக ஆகிய அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி வரிசையில் தவெகவும் இணைந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒரு கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளை பெறுவது அவசியம். தேசிய கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் பதிவான மொத்த வாக்குகளில் குறைந்தது 6% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இதனுடன் சேர்த்து, ஏதேனும் ஒரு மாநிலம் அல்லது மாநிலங்களில் இருந்து குறைந்தது 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.