×

“என் உயிர் உள்ள வரை விஜயுடன் இணைந்து பணியாற்றுவேன்”- செங்கோட்டையன்

 

 

யார் வேட்பாளர் என்று எண்ணாமல், விஜய் தான் வேட்பாளர் என்று மக்கள் வாக்களித்து உள்ளதாக கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபி தொகுதியில் வெற்றி பெற்ற கே.ஏ.செங்கோட்டையன், சான்றிதழ் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது, “இந்தியாவே வியக்கத்தக்க அளவிற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்பார்.  முதல் தேர்தல் களத்திலேயே வெற்றி வாகை சூடுவது என்பது இதுவரை இந்தியாவில் நடைபெறாத ஒன்று. அதற்குக் காரணம் அவருடைய தியாகமும், பல்வேறு சோதனைகளையும் தாண்டி இன்று மக்கள் சேவை செய்வதற்கு ஒரு தலைவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு மக்கள் வாக்களித்துள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தமிழக முழுவதும் விதிகளுக்கு உட்பட்டு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அதன் விளைவாக தமிழகம் முழுவதும் யார் வேட்பாளர் என்பதல்ல, விஜய் தான் வேட்பாளர் என்ற முறையில் மக்கள் வாக்களித்து நாளை தமிழகத்தில் நல்லாட்சி தர வேண்டும் என்று மக்கள் விரும்பியுள்ளனர்.

அந்த விருப்பத்தின் அடிப்படையில் நல்லாட்சி நாயகனாக நாளை தமிழகம் இந்தியாவிற்கு ஒரு வழிகாட்டியாக உருவாவதற்கு இயற்கையாக கொடுக்கப்பட்டிருக்கிற வரமாக நான் கருதுகிறேன். அப்படிப்பட்ட தலைவரோடு நாங்கள் எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும், நாளை அல்ல எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை அவரோடு இணைந்து அந்த பணிகளை மேற்கொள்வோம்” என்றார்.